காலி – கொழும்பு பிரதான வீதியின் வஸ்கடுவ, கொஸ்கஸ் சந்தி பகுதியில் முச்சக்கரவண்டியும் லொறியும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இன்று (24) காலை இடம்பெற்ற இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டியின் சாரதியான வஸ்கடுவ பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடைய திருமணமான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இறைச்சிக்காக கோழிகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்த போது முன்னால் வந்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
முன்னால் வந்த முச்சக்கரவண்டி கவனக்குறைவாக வலதுபுறம் திருப்ப முற்பட்ட போதே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது முச்சக்கரவண்டியில் கணவனும் மனைவியும் பயணித்ததாகவும், மனைவி படுகாயமடைந்து களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தின் பின்னர் லொறியின் சாரதி தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.