இந்தியாவில் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஒருவரை கடத்திச் சென்று திருமணம் செய்ய முயன்ற பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் ஹைதராபாத்தில் வசிக்கும் 31 வயதான வர்த்தகப் பெண்ணொருவரால் குறித்த தொகுப்பாளர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது,
மேலும், தொகுப்பாளரை கடத்துவதற்காக சந்தேக நபரான பெண்ணால் பணியமர்த்தப்பட்ட மேலும் நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
த்ரிஷ்னா என்ற பெண் இரண்டு வருடங்களுக்கு முன்னர் மேட்ரிமோனியல் இணையத்தளத்தில் குறித்த தொகுப்பாளரின் புகைப்படத்தைப் பார்த்து அவரைக் காதலிக்க ஆரம்பித்துள்ளார்.
பின்னர் தொகுப்பாளரின் தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து அவரைத் தொடர்பு கொண்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன்போது தொகுப்பாளர், யாரோ தனது புகைப்படத்தைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட மேட்ரிமோனியல் இணையதளத்தில் போலிக் கணக்கை உருவாக்கியுள்ளதாக சம்பந்தப்பட்ட பெண்ணிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அந்த கணக்கு தன்னுடையது அல்ல என்றும், இது குறித்து சம்பந்தப்பட்ட பாதுகாப்பு நிறுவனங்களில் புகார் செய்திருப்பதாகவும் தொகுப்பளார் கூறியுள்ளார்.
எனினும் குறித்த பெண், அந்த நபர் மீதான தனது ஆசையை கைவிடாமல் பல வருடங்களாக அவரை பின்தொடர்ந்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அதன்படி, சந்தேக நபர், தொகுப்பாளரின் காரில் ரகசியமாக கண்காணிப்பு கருவியை பொருத்தியுள்ளதுடன், அவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து அவரை கடத்த திட்டம் தீட்டியதாகவும், அவருக்கு உதவியாக நான்கு பேரை வேலைக்கு அமர்த்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதன்படி கடந்த 11ஆம் திகதி குறித்த நபர்கள் தொகுப்பாளரை கடத்திச் சென்று பெண்ணின் அலுவலகத்தில் வைத்து தாக்கி சித்திரவதை செய்துள்ளனர்.
உயிருக்கு பயந்து, அந்த பெண்ணின் அழைப்புகளுக்கு பதிலளிக்க ஒப்புக்கொண்ட தொகுப்பாளர் பின்னர் விடுவிக்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் உப்பல் பொலிஸ் நிலையத்தில் அவர் முறைப்பாடு செய்ததாகவும், முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகத்திற்கிடமான பெண் மற்றும் ஏனைய நால்வரும் கைது செய்யப்பட்டதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.