சீஷெல்ஸ் நாட்டின் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் கைதான இலங்கை பிரஜை ஒருவருக்கு 41,000 அமெரிக்க டொலர் அபராதம் விதித்து சீஷெல்ஸ் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 24 ஆம் திகதி சீஷெல்ஸ் பிரத்தியேக பொருளாதார வலயத்தில் (EEZ) அத்துமீறி நுழைந்த ரன்குருல்லா 4 என்ற கப்பலின் பொறுப்பாளரான மாக்கவிட்ட லியனகே திலேஷ் (43) என்பவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றம் சாட்டப்பட்டவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
குற்றவாளி இரண்டு பிள்ளைகளின் தந்தை என்றும், குடும்பம் அவரது வருமானத்தை நம்பி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தாம் பிடித்த மீன்களை சீஷெல்ஸ் மீன்பிடி அதிகார சபையினால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவை SCR 35,320 க்கு விற்கப்பட்டதாக இலங்கைப் பிரஜை நீதிமன்றில் தெரிவித்தார்.
இந்நிலையில், அபராதத்தை 60 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் எனவும், வழங்கப்பட்ட நாட்களுக்குள் செலுத்த தவறினால் குற்றவாளி 18 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.