சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகுதி ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று (20) கைப்பற்றப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் அனைத்து சோதனைகளையும் மீறி இரண்டு வர்த்தகர்கள், சுங்க வரி செலுத்தாமல் கொண்டு வரப்பட்ட 44,344,200 ரூபா பெறுமதியான சிகரெட்டுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் 29 மற்றும் 25 வயதுடைய கொழும்பு பொரளை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இவ்விருவரும் அடிக்கடி விமானப் பயணங்களில் ஈடுபட்டு வெளிநாட்டுப் பொருட்களை இலங்கைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இவர்கள் நேற்று பிற்பகல் 12.30 மணியளவில் இந்தியாவின் சென்னையில் இருந்து Fitz Air விமானம் 8D-832 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
மான்செஸ்டர் ரக சிகரெட்டுகளில் 33,400 சிகரெட்டுகளை அவர்களது சாமான்களில் மறைத்து வைத்திருந்ததை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.