காட்டு விலங்குகளை வேட்டையாடி விற்பனை செய்து வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காட்டு விலங்குகளை சட்டவிரோதமாக வேட்டையாடி ஆராசிக்கட்டுவ வில்பொத்த பகுதியில் விடுதி ஒன்றில் உணவிற்காக விற்பனை செய்து வருவதாக பாலாவி விமானப்படைப் புலனாய்வுப் பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் புத்தளம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து நேற்று மாலை குறித்த விடுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது இரண்டு குளிரூட்டிப் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்து காட்டுப்பன்றி இறைச்சி, மான் இறைச்சி மற்றும் எறும்புத்திண்ணி இறைச்சியுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
103 கிலோகிராம் காட்டுப்பன்றி இறைச்சி, 17 கிலோகிராம் மான் இறைச்சி மற்றும் 7 கிலோகிராம் எறும்புத்திண்ணி இறைச்சி இதன்போது கைப்பற்றப்பட்டதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்தப்போது குறித்த விடுதிக்கு மது அருந்துவதற்கு வருகைத் தருபவர்களுக்கு ஒரு பீங்கான் சுமார் 2500 ரூபா விற்பனை செய்து வந்ததாக இதன்போது சந்தேக நபர்கள் தெரிவித்ததாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வில்பொத்த மற்றும் தப்போவ பகுதிகளைச் சேர்ந்தவர்களென வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.