ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணிபுரியும் போதைப்பொருளுக்கு அடிமையான இளம் தொழிலாளர்களுக்கு ஹெரோயின் விற்பனை செய்யும் போதே அவர் இன்று (08) கைது செய்யப்பட்டுள்ளார்.
கிம்புலாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய திருமணமான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை கடற்படையின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரி எனக் கூறிக்கொண்டு கட்டுநாயக்க பிரதேசத்தில் சுற்றித் திரிந்து ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இவர் இந்த ஹெரோயின் போதைப்பொருளை கொழும்பில் இருந்து மொத்தமாக கொண்டு வந்து கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களுக்கு சில காலமாக சில்லறை விற்பனை செய்து வந்துள்ளார்.
அவரும் ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையாகி இருப்பது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட போது, அவரிடம் இருந்து சுமார் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான 2,400 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.