கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவரின் வாகன சாரதி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் விரைவாக கொழும்புக்கு செல்ல வேண்டும் என தெரிவித்ததாகவும், சம்பவத்தின்போது சனத் நிஷாந்த வாகனத்தில் உறங்கிக் கொண்டிருந்ததாகவும் சாரதி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘ நாம் வெகுவிரைவாக கொழும்புக்கு செல்லஎதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். பயணத்தின் இடைநடுவே அமைச்சர் தூங்கிவிட்டார். நெடுஞ்சாலையில் எனக்கு முன்னால் இருந்த காரை முந்திச் சென்றேன். ஜீப்பை மீண்டும் வலது பக்கப் பாதையில் கொண்டு செல்ல முயன்றபோது, முன்னால் இருந்த கொள்கலன் பாரவூர்தியில் மோதியது. இதன்போது ஜீப் கட்டுப்பாட்டை இழந்து வேலியில் மோதி நின்றது’ என்றார்.
விபத்து தொடர்பில் ராகம வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சாரதி பிரபாத் எரங்க பொலிஸாரின் விசாரணையின் போது இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
விபத்தின் போது, வாகனம் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்துள்ளது.
இந்த விபத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் தலை மற்றும் வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.