தம்புள்ளை, மகந்தனை பிரதேசத்தில் கடன் தவணையை செலுத்த முடியாத காரணத்தினால் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தம்புள்ளை மகந்தனையில் வசிக்கும் 36 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனியார் நிதி நிறுவனமொன்றில் 10 இலட்சம் ரூபா கடன் பெற்று மாதாந்தம் 34,000 ரூபா செலுத்துவதாக அவர் உறுதியளித்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனினும் நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பணத்தை செலுத்த முடியாமல் அவர் மனம் உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரது தொழில் நடவடிக்கைகளில் ஏற்பட்ட இடையூறு காரணமாக இந்தக் கடன் தொகையைச் செலுத்த முடியவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பல தவணை செலுத்த முடியாததால் கடன் தொகையை அடிக்கடி செலுத்துமாறு அந்த நபரை கடன் கொடுத்த நிதி நிறுவனமும், கடன் உத்தரவாததாரர்களும் தொந்தரவு செய்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.