இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong இன்று (19) பாராளுமன்றத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பில் பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவும் கலந்துகொண்டதாக பாராளுமன்ற தகவல் தொடர்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது சீன மக்கள் காங்கிரஸின் (சீன பாராளுமன்ற சபாநாயகர்) நிலைக்குழுவின் தலைவர் ஜாவோ லெஜியின் புத்தாண்டு வாழ்த்து செய்தியை சீன தூதுவர் சபாநாயகரிடம் வழங்கினார்.
அத்துடன், இரு தரப்புக்கும் இடையிலான கலந்துரையாடலின் போது, ’ஒரே சீனா’ கொள்கைக்கு இலங்கை அளித்து வரும் ஆதரவை பாராட்டுவதாக சீனத் தூதுவர் தெரிவித்தார்.
அரசாங்கம் என்ற ரீதியில் இலங்கை எப்போதும் ஒரே சீனா கொள்கையை ஏற்றுக்கொள்கிறது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இது தவிர கொழும்பு துறைமுக நகரத் திட்டம் உட்பட இலங்கையில் சீன முதலீடுகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.