சிவனொளிபாதமலை யாத்திரிகர்கள் குழுவை ஏற்றிக்கொண்டு வேனில் வந்த சாரதி ஒருவரிடம் இருந்து பல போலி நாணயத்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர் நேற்று (17) இரவு கைது செய்யப்பட்டதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வலஸ்முல்ல பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடையவர் எனவும் அவர் வேன் சாரதியாக பணியாற்றி வருவதாகவும் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் நேற்றிரவு மெதமுலன பிரதேசத்திலிருந்து யாத்திரிகர்கள் குழுவொன்றுடன் நல்லதண்ணி பிரதேசத்திற்கு வந்துள்ளதுடன், யாத்திரிகர்கள் சிவனொளபாதமலைக்கு சென்ற பின்னர் சந்தேகநபர் நல்லதண்ணிய நகரில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்துள்ளார்.
இதனைப் பார்த்த கடை உரிமையாளர் ஒருவர் தொலைபேசி மூலம் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதன்படி, உடனடியாகச் செயற்பட்ட நல்லதண்ணி பொலிஸார், சாரதியைக் கைதுசெய்ததுடன், சந்தேகநபரின் பணப்பையில் இருந்துஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் 11 உம், 500 ரூபா போலி நாணயத்தாள் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.
வாடகை அடிப்படையில் ஆட்களை ஏற்றிச் சென்ற போது, தனது வேனில் பயணித்தவர்கள் பணத்தாள்களை தன்னிடம் கொடுத்ததாகவும், அந்தப் பணம் போலியானது என்பது தனக்குத் தெரியாது எனவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.