காதல் என்ற போர்வையில் யுவதியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
19 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தின் பின்னர் ஏற்பட்ட கடும் மன உளைச்சல் காரணமாக அவர் தற்கொலைக்கு முயன்று தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக எமது உள்ளூர் செய்தியாளர் தெரிவித்தார்.
நவகத்தகம பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் இந்த யுவதி தனது பாட்டியுடன் அப்பகுதியில் உள்ள அறையில் வாடகை அடிப்படையில் தங்கியிருந்துள்ளார்.
அண்மையில், ஆனமடுவ நகருக்கு தேவைக்காக பணம் பெற்றுக் கொள்வதற்காக வந்த போதே குறித்த இளைஞனை கண்டு பழகியுள்ளார்.
அதன் பின்னர் இருவரும் சிறிது காலமாக காதலித்து வந்த நிலையில், கடந்த 15 ஆம் திகதி இருவரும் சந்தித்துள்ளனர்.
ஆனமடுவ நகரிலுள்ள லேக் சுற்றுக்கு யுவதியை அழைத்த இளைஞன் அங்கு அவரை துஷ்பிரயோகம் செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
பின்னர், வீடு திரும்பிய யுவதி, நடந்த சம்பவத்தை தனது தந்தையிடம் கூறிவிட்டு, கழிவறைக்குச் சென்று அங்கு சில மாத்திரைகளை உட்கொண்டுள்ளார்.
பின்னர் யுவதியின் பெற்றோர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அவரை அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.