மன்னார் கடற்படைக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் மன்னார் பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினருடன் இணைந்து எருக்கலம் பிட்டி பகுதியில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது அனுமதி அளிக்கப்பட்ட அளவை விட சிறிய அளவிலான சங்குகளை உடமையில் வைத்திருந்த பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் (16) மதியம் கடற்படைக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மன்னார் பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினருடன் இணைந்து மன்னார் மாவட்டத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனைக்கு அமைய மன்னார் குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இந்த சங்குகள் மீட்கப்பட்டன.
எருக்கலம் பிட்டி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் அனுமதி வழங்கப்பட்ட அளவை விட அதிக அளவில் சங்குகள் களஞ்சியப் படுத்தப்பட்டிருந்ததுடன் அனுமதி வழங்கப்பட்ட அளவை விட சிறிய அளவிலான சங்குளை உடமையில் வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த களஞ்சியசாலையில் 20 ஆயிரம் சங்குகளே களஞ்சியப்படுத்த அனுமதி காணப்பட்ட நிலையில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சங்குகளும் வளர்ச்சி நிலை அடையாத சங்குகளும் களஞ்சியப்படுத்தப்பட்ட அடிப்படையில் வீட்டின் உரிமையாளர் உட்பட பணியாளர்கள் இருவர் உள்ளடங்களாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளர்.
குறித்த களஞ்சியசாலையில் இருந்து 14,143 சங்குகள், 16 கிலோ கிராம் காய்ந்த அட்டைகள்,700 உயிர் அட்டைகளை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளுக்காக சான்று பொருட்களை மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
மேலதிக விசாரணையின் பின்னர் சங்கு,அட்டைகள் உட்பட சந்தேக நபர்கள் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.