பெண்ணொருவரிடமிருந்து தங்க நகையை திருடிக்கொண்டு தப்பிச்செல்ல முயன்ற நபரை சிலர் மடக்கி பிடித்து தாக்கியுள்ளனர்.
பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட அவர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பாணந்துறை பிங்வல பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று (14) மதியம் பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க நகையை திருடிக்கொண்டு தப்பி ஓட முயன்றுள்ளார்.
அப்போது, அவரை ஒரு கும்பல் பிடித்து தாக்கி பாணந்துறை தெற்கு பொலிஸில் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.
பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட அவர், சற்று சிரமப்பட்டதால் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்க பொலிஸ் அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சடலம் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.