Friday, November 15, 2024
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டு2024 -2025 இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் வருடங்களாகும்

2024 -2025 இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் வருடங்களாகும்

2024 -2025 இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் வருடங்களாகும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

யாழ். மாவட்ட தொழில் வல்லுனர்களுடன் யாழ்ப்பாணத்தில் நேற்று (04) நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

2019 உயிர்த்தஞாயிறு தாக்குதலின் பின்னர் நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்து. 2020 ஆம் ஆண்டில் கொவிட் தொற்று காரணமாக மேலும் சரிவடைந்தது. அந்த நிலை 2022 இல் மேலும் மோசமாக மாறியிருந்ததோடு, 7% மறைப்பெறுமானத்தை விடவும் வீழ்ச்சியடைந்தது.

அந்த நெருக்கடியான காலத்தை கடந்து 2023 ஆம் ஆண்டில் ஓளரவு பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் இயலுமை எமக்கு கிட்டியது. 2023 ஆம் ஆண்டில் முதல் இரு காலாண்டுகளில் பொருளாதார வளர்ச்சி குறைவாக காணப்பட்ட போதிலும் அடுத்த இரு காலாண்டுகளில் வளர்ச்சி ஏற்பட்டது. குறிப்பாக நான்காம் காலாண்டியில் முன்னேற்றகரமான வளர்ச்சியை காண முடிந்தது.

அந்த அடிப்படையில் ,இவ்வருடத்தில் 3% பொருளாதார வளர்ச்சியை பெற்றுக்கொள்ள நாம் எதிர்பார்ப்பதோடு, 2025 ஆம் ஆண்டில் 5% ஆக பொருளாதார வளர்ச்சியை பலப்படுத்த எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு நாம் முன்னோக்கிச் செல்ல முடியும். இவ்விரு வருடங்களும் நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்தும் வருடங்களாகும். இன்று நாம் நாட்டின் பொருளாதார முறைமையை மாற்றியுள்ளோம். இன்று நாம் பணம் அச்சிடுவதில்லை. அச்சிடும் பட்சத்தில் ரூபாயின் பெறுமதி குறைந்து பணவீக்கம் அதிகரிக்கும். அதேபோல் வங்கிகளிடத்திலிருந்து கடன் பெறுவதும் இல்லை. எமது அரச வங்கிக் கட்டமைப்புக்களும் நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளன.

அதனால் கடன் மற்றும் பணம் அச்சிடும் செயற்பாடுகளை விடுத்தே நாம் முன்னேறிச் செல்ல வேண்டும். அதனாலேயே கடன் வழங்குநர்களிடத்தில் நடத்திய பேச்சுவார்த்தையின் போது இந்நாட்டின் பொருளாதாரத்தை போதிய அளவு பலப்படுத்த முடியுமா? என்ற கேள்வி எழுந்தது.

அதனால் நாம் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும். நாம் இவ்வருடத்தில் 12% மொத்த தேசிய உற்பத்தியை பெற்றுக்கொள்ள வேண்டும். இறுதியில் 15% ஆக அதனை பலப்படுத்திக்கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.

அதனாலேயே இவ்வருடத்தில் வற் வரியை அதிகரிக்க நேரிட்டது. போதியளவு வருமானம் உள்ள பொருளாதாரம் ஒன்று எமக்கு அவசியம். அதேபோல் நாம் வரவு செலவு திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். எமது தேவைகளுக்காகவும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

எமது வருமானத்தில் அதிக தொகையை கடன் வட்டியாக செலுத்த நேர்ந்துள்ளமையே பெரும் பிரச்சினையாகும். அந்த பிழையை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். சில நேரங்களில் அரசாங்கம் தங்களது இயலுமைக்கு மிஞ்சிய செலவுகளை செய்துள்ளது. இவ்வாறான தவறுகளை சரிசெய்து நாம் முன்னேற வேண்டும். எனவே எமக்கு புதிய பொருளாதாரம் தேவை. நாம் திட்டமிட்ட அடிப்படையில் நாட்டில் அந்தப் பொருளாதாரத்தை கட்டியெழுப்பி வருகின்றோம்.

இது ஒரு தொழில் வாய்ப்பை உருவாக்கும் பொருளாதாரம். மேலும் அது நமக்கு அந்நியச் செலாவணியை மேலதிகமாகக் கொடுக்கும், அதிக வருமானத்தைத் தரும் பொருளாதாரமாக இருக்க வேண்டும். அதன்போது ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட விவசாயப் பொருளாதாரம் தொர்பில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

வடக்கு மாகாணத்தை தனித்துவமான பொருளாதார மையமாக கட்டியெழுப்ப முடியும். மேலும், வடக்கை புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மையமாக உருவாக்க முடியும். வட. மாகாணத்தின் அபிவிருத்திக்குத் தேவையான அனைத்து வளங்களும் இங்கு உள்ளன. வடக்கின் அபிவிருத்திக்கு மட்டுமன்றி முழு நாட்டின் அபிவிருத்திக்கும் பங்களிக்க முடியும்.

அதற்கு போதுமான அதிகாரப்பகிர்வு ஏற்கனவே இடம்பெற்றுள்ளது. அந்த செயற்பாடுகளுக்கு 13 ஆவது திருத்தத்தின் மூலம் கிடைத்துள்ள அதிகாரங்களே போதுமானது என நினைக்கின்றோம். கொழும்பில் இருந்து பணம் வரும் வரை காத்திருக்காமல் அனைவரும் ஒன்றிணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

நாம் ஜப்பான் தொடர்பில் கவனம் செலுத்தினால், ஜப்பான் சமஷ்டி ஆட்சியுள்ள ஒரு நாடு அல்ல. ஆனால் அதன் அனைத்து மாகாணங்களும் அபிவிருத்தி அடைந்துள்ளன. அதேபோன்று, கொரியா, ஐக்கிய இராச்சியம், ஸ்கொட்லாந்து ஆகிய நாடுகள் அந்த வளர்ச்சியை எட்டியுள்ளன. அப்படியானால் ஏன் ஒரு நாடாக எமக்குரிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது?

அதிகாரப் பகிர்வு பற்றி கதைப்பதுபோன்று, அந்த அதிகாரங்களை தமது மாகாணங்களின் வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் பயன்படுத்த வேண்டும். நாம் அரசியல் ரீதியாக அதிகாரப்பகிர்வு பற்றி பேசுகிறோம். சட்டத்தால் இந்த அதிகாரங்கள் அனைத்தையும் வழங்கலாம். ஆனால் உங்களின் மாகாணத்தை அபிவிருத்தி செய்ய போதிய பணம் இல்லை என்றால் அதன் பெறுமதி என்ன என்று நாம் கண்டறிய வேண்டும்.

அதிகாரப் பகிர்வு குறித்து நாம் பல்வேறு கருத்துக்களை வெளிப்படுத்தலாம். ஆனால் இன்றைய நிலவரப்படி மேல் மாகாணத்தால் மாத்திரமே தனது சொந்த செலவை செய்ய முடிகிறது. அதன்படி, எனைய அனைத்து மாகாணங்களும் மேல் மாகாணத்துடன் இணைகின்றன. எனவே, தமது மாகாணத்தை அபிவிருத்தி செய்ய, தங்கள் சொந்த மாகாணங்களுக்குள் வலுவாக இருக்க வேண்டும்.

உங்கள் மாகாணத்தில் ஒரு வெளிநாட்டு மொழிப் பாடசாலையை நிறுவ விரும்பினால், அதற்கு அரசாங்கம் ஏன் பணம் வழங்க வேண்டும்? அதற்கான கேள்வி மற்றும் தேவை இருந்தால், நீங்கள் அதை எளிதாக ஆரம்பிக்க முடியும். மாணவர்கள் கல்வியைத் தொடர தேவையான உதவிகளை அரசாங்கம் வழங்குகிறது. உலகின் ஒவ்வொரு நாட்டிலும் கல்வி இப்படித்தான் செயல்படுகிறது. இந்த நாட்டின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை சீர் செய்யத்தான் என்னால் முடியும் என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles