இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக படகில் கடத்தப்பட்ட 4.50 கோடி ரூபாபெறுமதியான 7.70 கிலோ தங்கம் திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகளால் தர்கா பேருந்து நிலையம் அருகே வைத்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதிகாரிகளை தாக்கி விட்டு தப்பிச் சென்ற நபரை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், தனுஷ்கோடி கடல் பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் இலங்கையில் இருந்து சமீப காலமாக அதிக அளவு கடத்தல் தங்கம் நாட்டுப் படகுகளில் தனுஷ்கோடி வழியாக தமிழகத்திற்குள் கடத்தி வரப்படுகிறது.
இந்நிலையில் திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு நேற்று இரவு இலங்கை தலைமன்னாரிலிருந்து கடல் வழியாக நாட்டுப்படகில் ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுக கடற்கரைக்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறையினர் ராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகளுடன் இணைந்து ராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் துப்பாக்கியுடன் மறைந்திருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகம் அருகே வந்து நின்ற நாட்டு படகில் இருந்து மர்ம நபர் ஒருவர் தங்கக் கட்டிகள் கொண்ட பார்சலை கரையில் நின்று கொண்டிருந்த நபரிடம் கொடுத்து விட்டு மீண்டும் படகில் புறப்பட்டு சென்றார்.
கடத்தல் தங்க கட்டிகளை பெற்று கொண்ட நபர் சென்று கொண்டிருக்கும் போது அவரை பின் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் அரை மடக்கி பிடிக்க முயன்ற போது, அதிகாரியை தள்ளிவிட்டு அவர் தப்பி சென்றார்.
இதையடுத்து அவர் பயணித்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்த போது வாகனத்தின் முன் பகுதியில் உள்ள பையில் இருந்து தங்க கட்டிகள் மீட்கப்பட்டன.
7.70 கிலோ எடைகொண்ட தங்கம் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கடத்தல் தங்கத்தை விட்டு சென்ற நபர் தங்கச்சிமடத்தை சேர்ந்த ஒருவர் என்பது தெரியவந்துள்ளதாகவும் அவரை தீவிரமாக தேடி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் 4.50 கோடி ரூபா என்றும், கடத்தல் தங்கம் யாருக்காக கொண்டு வரப்பட்டது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தை திருச்சியில் உள்ள மத்திய சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு தலைமை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர்.