2019 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 107 கிலோ ஹெரோயின் நேற்ற (14) அழிக்கப்பட்டது.
புத்தளம் மாவட்ட நீதவான் முன்னிலையில் குறித்த ஹெரோயின் போதைப் பொருள் அழிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அழிக்கப்பட்ட ஹெரோயின் 107 கோடி ரூபா பெறுமதியுடையது எனத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட குறித்த ஹெரோயின் போதைப் பொருளுடன் ஈரானிய பிரஜைகள் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து 107 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயினை அழிக்க உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயின் கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே, பொலிஸ் விஷேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகளின் விசேட பாதுகாப்பில் கொழும்பில் இருந்து புத்தளம் பாலாவி சீமெந்து தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு நேற்று அழிக்கப்பட்டது.
அழிக்கப்பட்ட ஹெராயின் அரச பகுப்பாய்வாளர் திணைக்கள அதிகாரிகள் முன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன்இ கொள்கலனில் எடுக்கப்பட்ட 500 லீட்டர் தண்ணீரில் கரைக்கப்பட்டு 2300 வெப்பநிலையில் உலைக்கு கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்பட்டது.