இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கை ஆபத்தை ஏற்படுத்தாது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்திய ஊடகம் ஒன்றிடம் உறுதியளித்துள்ளார்.
இந்திய செய்திச் சேவையான ‘Firstpost’க்கு வழங்கிய பிரத்தியோக செவ்வியிலேயே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில்,
அண்மைக் காலமாக இலங்கையில் உள்ள துறைமுகங்களுக்குச் சீன ‘உளவுக் கப்பல்கள்’ வருகை தந்த விவகாரம் இந்தியாவில் பாதுகாப்புக் கவலைகளை ஏற்படுத்தியிருந்தது.
எவ்வாறெனினும், இருதரப்பு உறவுகளில் இந்த விடயம் எந்த பாதிப்புகளையும் ஏற்படுத்தாது.
இந்தியா தனது சொந்த பாதுகாப்பைப் பற்றி கவலைப்படுகிறது.
இந்தியாவின் பாதுகாப்பைக் சீர்குலைக்கும் வகையில் நாங்கள் எந்த நடவடிக்கையினையும் மேற்கொள்ள மாட்டோம் என்றும் ஜனாதிபதி கூறினார்.
கடந்த ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு உதவியதற்காக இந்தியாவுக்கு இந்த செவ்வியின் போது தனது பாராட்டினையும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பின் தெற்கு துறைமுகத்தில் ஒரு பெரிய திட்டம் உட்பட இலங்கையில் இந்தியா பாரிய அளவில் முதலீடு செய்ய உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியுடனான அவரது சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுக்கு பெரும் உத்வேகத்தை அளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இருந்த போதும் இந்த செவ்வியில், இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக ஐ.நா.வில் தனது நாட்டை விமர்சித்ததற்காக இந்திய அரசை ரணில் விக்கிரமசிங்க கடுமையாக சாடியும் பேசியமை குறிப்பிடத்தக்கது.