Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஹம்பாந்தோட்டை துறைமுகம் - துறைமுக நகரம் என்பன முதலீட்டுக்கு தயார்

ஹம்பாந்தோட்டை துறைமுகம் – துறைமுக நகரம் என்பன முதலீட்டுக்கு தயார்

சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியும் அரச உறுப்பினருமான சேன் யிங்க் (Shen Yiqin) நேற்று (20) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் உட்பட இலங்கைக்கு சீனா வழங்கும் ஆதரவைப் பாராட்டிய ஜனாதிபதி, அதற்காக சீன ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவித்தார்.

அத்துடன், சுற்றுலா, விளையாட்டு, விவசாயம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பதே இலங்கையின் எதிர்பார்ப்பு எனத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் துறைமுக நகரம் என்பன இன்று முதலீட்டுக்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

பொருளாதார ரீதியில் அதிக பங்களிப்பை வழங்கக் கூடிய பெல்ட் என்ட் ரோட் (Belt & Road) திட்டத்தின் இரண்டாவது கட்டத்திற்குப் பிரவேசிப்பதற்கு அதன் பங்காளரான இலங்கை போன்ற நாடுகள் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார் .

பிராந்திய விரிவான பொருளாதார பங்காளித்துவத்திற்குள் (RCEP) பிரவேசிக்க இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி விளக்கினார்.

இந்து சமுத்திரம், கடற்பயணத்திற்கான சுதந்திர வலயமாக இருக்க வேண்டும் எனவும் புவிசார் அதிகாரப் போட்டியின்றி அமைதியான வலயமாக பேண இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

சீனா-இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மிக விரைவில் நடைமுறைப்படுத்தவும் இரு தரப்பும் உடன்பாடு தெரிவித்தன.

இலங்கைக்கு சீனாவின் தொடர்ச்சியான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய ஷென் யிங்க், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் வலியுறுத்தினார்.

இந்தச் சந்திப்பில் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளர் தினுக் கொழம்பகே ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Keep exploring...

Related Articles