போலி ஆவணங்களை தயாரித்து தரக்குறைவான மருந்துகளை இறக்குமதி செய்த நிறுவனத்தின் உரிமையாளரும், அதற்கு ஒப்புதல் அளித்த இரண்டு சிரேஷ்ட அரச அதிகாரிகளும் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
சம்பந்தப்பட்ட சந்தேகநபர்கள் வெளிநாடு செல்ல தயாராகி வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் பிரேரணையை சமர்ப்பித்ததை அடுத்து மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இந்த தடையை விதித்துள்ளது.
சந்தேக நபர்களான குறித்த நிறுவனத்தின் உரிமையாளர் சுகத் ஜானக பெர்னாண்டோ, மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி விஜித் குணசேகர மற்றும் அமைச்சின் வழங்கல் பணிப்பாளர் கலாநிதி கபில விக்ரமநாயக்க ஆகியோருக்கு எதிராகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலி ஆவணங்களை தயாரித்து 22,500 இம்யூனோகுளோபழனை இறக்குமதி செய்து 130 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மோசடி செய்ததாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.