அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கான நிலுவை கொடுப்பனவுகளை தீர்க்க 5.6 பில்லியன் ரூபா திறைசேரியில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 02 மாதங்களுக்கு மருந்து விநியோகத்திற்கான மேலதிக ஏற்பாடுகளை பெற்றுக்கொள்வதற்காக அமைச்சரவை பத்திரம் ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார அமைச்சின் கட்டுப்பாட்டில் உள்ள வைத்தியசாலைகள், சுகாதார நிறுவனங்களில் நிலவும் பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றுக்கு விரைவான தீர்வு காணும் நோக்கில் இன்று (27) நாரஹேன்பிட்டி இரத்த மாற்று நிலைய கேட்போர் கூடத்தில் விசேட மாநாடொன்று இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனை தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர்கள், வைத்தியசாலை பணிப்பாளர்கள், மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர்கள், வைத்திய அத்தியட்சகர்கள், பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.