கனடாவில் விசா சேவையை இந்தியா மீண்டும் ஆரம்பித்துள்ளது.
இதன் மூலம் கனடாவில் இருந்து தொழில், மருத்துவம் உள்ளிட்ட காரணங்களுக்காக பயணிகள் இந்தியாவிற்கு வர முடியும்.
விசா சேவை ஆரம்பமாகியுள்ளதால் கனடாவில் இருந்து இந்தியா வரும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கனடாவின் சீக்கிய பிரிவினைவாத அமைப்பின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கடந்த ஜூன் 18ம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
இது கனடா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்த நிலையில், இந்த சம்பவத்தின் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தார்.
இதன் காரணத்தினால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. அத்துடன் இரு நாடுகளும் தங்களது தூதரக அதிகாரிகளை உடனடியாக திரும்ப பெற்றுக் கொண்டனர்.
மேலும் கனடாவின் குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்த இந்தியா,கனடாவிற்கான விசா சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
தற்போது இந்தியா மீண்டும் விசா வழங்கும் நடவடிக்கையை முன்னெடுத்து வருகிறது.