ஹொரொவ்பொத்தானை – பரங்கியவாடிய பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பரங்கியவாடியில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தில் பயணித்த குழுவினர், அந்தப் பகுதியில் ஒருவர் விழுந்து கிடப்பதாக ஹொரொவ்பொத்தானை பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதிகாலை 3.30 மணியளவில் குறித்த இடத்திற்குச் சென்ற பொலிஸ் குழு, தரையில் கிடந்த நபரை ஹொரொவ்பொத்தானை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தது.
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது அவர் உயிரிழந்திருந்ததாக ஹொரொவ்பொத்தானை மாவட்ட வைத்தியசாலை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
யானை தாக்கி உயிரிழந்த நபர் பரங்கியவாடிய பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடையவர் எனவும், அவர் நேற்று (20) இரவு பரங்கியவாடியாவிலிருந்து ஹொரொவ்பொத்தானை நகருக்கு மோட்டார் சைக்கிளில் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொருட்களை வாங்கிவிட்டு வீடு திரும்பும் போதே யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் ஹொரொவ்பொத்தானை மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஹொரொவ்பொத்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.