காசாவில் வடக்குப் பகுதியிலிருந்து தெற்குப் பகுதிக்கு பயணிக்கும் மக்களில் 17 இலங்கையர்கள் இருப்பதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
இந்த இலங்கையர்களை எகிப்தில் உள்ள ரஃபா எல்லை வழியாக எகிப்திற்குள் கொண்டு வருவதற்கு வெளிவிவகார அமைச்சு செயற்பட்டு வருவதாக தூதுவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஜோர்தானில் இருந்து சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் பிரவேசித்த இரண்டு இலங்கைப் பெண்கள் ஜோர்தான் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட பின்னர் அவர்கள் தொடர்பில் எவ்விதத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை எனவும் அவர் நேற்று குறிப்பிட்டார்.
இதேவேளை, இஸ்ரேலில் காணாமல் போன இலங்கையர் அனுலா ஜயதிலகவின் மரணத்தை இஸ்ரேல் அதிகாரிகள் உறுதி செய்துள்ளதாகவும், இரண்டு நாட்களில் அவரது சடலம் இலங்கை தூதரகத்தில் இருந்து பெற்றுக் கொள்ளப்படும் எனவும் தூதுவர் மேலும் கூறினார்.