இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 27 மீனவர்களையும், ஐந்து விசைப்படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் தபால் தந்தி அலுவலகம் முன்பு இன்று (18) காலை பாதிக்கப்பட்ட மீனவர்களும், மீனவ சங்க அமைப்புகளும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடந்த 14ஆம் திகதி இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதி மீனவர்களையும், படகுகளையும், விடுதலை செய்ய வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
போராட்டத்தில் மீனவ சங்க பிரதிநிதிகள் மற்றும் சார்பு தொழிலாளர்கள் மத்திய மாநில அரசு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபடுவோர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று நடைபெற இருந்த பாம்பன் சாலை மறியல் போராட்டத்தை அரசு அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க ராமேஸ்வரம் தபால் தந்தி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டமாக முன்னெடுத்துள்ளோம்.
அதேபோல் வரும் 27ஆம் திகதி மீனவர்களையும் விசைப்படகுகளையும் விடுதலை செய்து தருவதாக அரசு சார்பில் அரசு அதிகாரிகள் உத்தரவாதம் அளித்துள்ளனர்.
அதிகாரிகள் கூறியது போல், கைதான மீனவர்கள் விடுவிக்கபடாவிட்டால் நவம்பர் முதலாம் திகதி தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மீனவ அமைப்புகளையும் ஒன்று திரட்டி மண்டபத்தில் ரயில் மறியல் போராட்டம் மற்றும் தொடர்ச்சியான பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்த இருப்பதாக தெரிவித்தனர்.