இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் கூட்டத்தில் பங்கேற்க நாட்டிற்கு வருகை தந்திருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையிலான சந்திப்பு நேற்று (11) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்திய – இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில், மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதேபோல் இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் இலங்கையில் முன்னெடுக்கப்படும் வீட்டுத் திட்டத்தை இணையத்தின் ஊடாக திறந்துவைக்கும் நிகழ்வும் இதன்போது, இடம்பெற்றது.
10 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கான திட்டத்தின் நான்காவது அத்தியாயத்தின் கீழ் வீடொன்றை நிர்மாணிப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த 1.026 மில்லியன் ரூபாவை 2.8 மில்லியன் ரூபாயாக அதிகரித்துக்கொள்வதற்கான ஒப்பந்தமும் கைசாத்திடப்பட்டது.
இலங்கை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் 9 திட்டங்களை விரைவில் நிறைவு செய்வதற்கு அவசியமான மேலதிக ஒதுக்கீடுகளை இந்திய அரசாங்கம் வழங்கவுள்ளதோடு அதற்கான ஒப்பந்தமும் கைசாத்திடப்பட்டது.
அதேபோல் இலங்கையின் தேசிய பாலுற்பத்தியை பலப்படுத்தும் வகையில் இந்தியாவின் குஜராத் கூட்டுறவு பால் விற்பனை சம்மேளனமான அமுல் குழுமம் மற்றும் இலங்கையின் காகீல்ஸ் கூட்டு வர்த்தக நிறுவனம், இந்திய தேசிய பாலுற்பத்தி ஊக்குவிப்பு சபை ஆகியன இணைந்து முன்னெடுக்கவுள்ள கூட்டு வேலைத்திட்டத்திற்கான ஒப்பந்தமும் கைசாத்திடப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் பலனாக கைசாத்திடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் ஊடாக இந்நாட்டின் கால்நடை வளர்ப்புத் துறையை மேம்படுத்துவதற்கான நிதி உதவிகள் கிடைக்கவுள்ளன.