கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையுடனான காலநிலை காரணமாக களுத்துறை மாவட்டத்தில் தொற்று நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் களுத்துறை தேசிய சுகாதார நிறுவகத்தின் பணிப்பாளர் வைத்தியர் தம்பர களுபோவில தெரிவித்துள்ளார்.
இந்த நாட்களில் வீட்டில் சமைத்த உணவை மட்டுமே சாப்பிடுவது சிறந்தது என்றும், உணவு பாதுகாப்பாக இல்லாவிட்டால், வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் வரலாம் என்றும் மருத்துவர் தெரிவித்தார்.
மேலும், குடிநீர் ஆதாரங்களில் அழுக்கு நீர் சேர்வதால், காய்ச்சிய நீரைக் குடிப்பது மிகவும் உகந்தது எனத் தெரிவித்த மருத்துவர், மழைநீர் தேங்கிய வயல்களில் இருந்து சந்தைக்குக் கொண்டுவரப்படும் காய்கறிகள், பச்சைக் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை கழுவி தகுந்த வெப்பநிலையில் சமைப்பது நல்லது என அவர் கூறினார்.
