சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் இன்று மொரோக்கோவின் மராகேச்சில் ஆரம்பமாகவுள்ளது.
இந்த கூட்டத்தில் இலங்கை சார்பில், நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட குழுவினர் பங்கேற்கவுள்ளனர்.
2024ஆம் ஆண்டு இலங்கை பொருளாதார ஸ்திரத்தன்மையில் இருந்து பொருளாதார வளர்ச்சி நோக்கி நகர்வதை உறுதி செய்வதற்காக சர்வதேச நம்பிக்கையை மேம்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பு இதுவாகும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த மாநாட்டில் உலகம் ஏற்றுக்கொண்ட நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள சர்வதேச நம்பிக்கையை இலங்கையால் மேலும் உறுதிப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.