பொகவந்தலாவை சென் மேரிஸ் மத்திய கல்லூரியில் தரம் 10 இல் கல்வி பயிலும் நிதர்சனா என்ற 15 வயது மாணவி சோழன் உலக சாதனை படைத்துள்ளார்.
54 கிலோ மீற்றர் தூரத்தினை 8 மணி 30 நிமிடங்களில் நடந்து அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
நாவலப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் முன்னால் நேற்று (20) காலை 06:05 மணிக்கு தொடங்கப்பட்ட சோழன் உலக சாதனை படைப்பதற்கான நடைப் பயணம், கினிகத்தேனை, வட்டவளை, ஹட்டன், நோர்வூட், பொகவந்தலாவ நகரங்கள் ஊடாக, பகல் 02 மணி 35 நிமிடங்களில் பொகவந்தலாவை சென் மேரிஸ் தேசிய கல்லூரியில் நிறைவடைந்தது.
அதிக ஏற்றக் கோணம் கொண்ட மலையகப் பாதையில் இவர் எந்தவித ஓய்வும் இன்றி நடந்து சோழன் உலக சாதனை படைத்தார் என்பது விசேட அம்சமாகும்.
சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீ நாகவாணி ராஜா, நுவரெலியா மாவட்டத் தலைவர் சாம்பசிவம் சதீஸ்குமார் மற்றும் கண்டி மாவட்டப் பொதுச் செயலாளர் சடையாம்பிள்ளை சந்திரமோகன் போன்றோர் இவ்வுலக சாதனை முயற்சியை தொடக்கம் முதல் இறுதி வரை கண்காணித்து உலக சாதனையாக உறுதி செய்தார்கள்.