இந்து-பசுபிக் பிராந்தியத்தில் பெரும் வல்லரசுப் போட்டி நிலவிய போதிலும், இந்து சமுத்திரம் மற்றும் தென் பசுபிக் சமுத்திர தீவு நாடுகளின் சுதந்திரம், அவற்றின் உள்ளக விவகாரங்களில் தலையிடாமை மற்றும் அவர்களின் தனிப்பட்ட உரிமைகளைப் பாதுகாப்பதற்காக பிராந்தியத்தின் அனைத்து நாடுகளும் அர்ப்பணிக்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடருடன் இணைந்ததாக நியூயோர்க் நகரில் நேற்று (18) நடைபெற்ற கடல்சார் நாடுகளுக்கான 3 ஆவது இந்து – பசுபிக் தீவு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
பிரதான உலக வல்லரசுகளுக்கு இடையிலான போட்டியில் தலையிடுவதற்கு, இந்து சமுத்திர மற்றும் தென் பசுபிக் பிராந்தியத்தின் தீவு நாடுகள் விரும்பவில்லை என்றும், இந்த நாடுகள் தமது சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாடு உட்பட அவர்களின் முதன்மையான விடயங்களில் கவனம் செலுத்தி, தமது நாடுகளின் இறைமை மற்றும் சுதந்திரத்தைப் பேண முயற்சிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.