கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய வெள்ளை வேன் ஊடகவியலாளர் சந்திப்பு சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் பயணத்தடையை தற்காலிகமாக நீக்கி கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தோட்டவத்த முன்னிலையில் இன்று மோஷன் மூலம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ராஜித சேனாரத்ன சார்பில் ஆஜரான சட்டத்தரணி, தனது கட்சிக்காரருக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்கி உத்தரவிடுமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.
மனுதாரர் சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் அந்த கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
இதன்படி, பயணத்தடையை தற்காலிகமாக நீக்கி உத்தரவிட்ட நீதிபதி, குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு நீதிமன்ற பதிவாளருக்கும் உத்தரவிட்டார்.