அநுராதபுரம் சிறைச்சாலைக்கு இரவுநேரம் மதுபோதையில் சென்று, தமிழ் அரசியல் கைதிகளில் தலையில் கைத்துப்பாக்கியை வைத்து கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படும், அப்போதைய சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவை இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு அனுராதபுரம் பிரதான நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி நாலக சஞ்சீவ ஜயசூரிய இன்று உத்தரவிட்டுள்ளார்.
பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு எதிரான வழக்கை 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் திகதி முதல் முறையாக விசாரிக்க தீர்மானித்த பிரதான நீதவான், சந்தேகத்திற்குரிய இராஜாங்க அமைச்சரை அன்றைய தினம் மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேலும் உத்தரவிட்டார்.
இதேவேளை, இந்த வழக்கின் முதலாவது சாட்சியான பூபாலசிங்கன் சூரியபாலன் மற்றும் இரண்டாவது சாட்சியான மணியரசன் சுலக்ஷன் ஆகியோரை அன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகி வழக்கு தொடர்பான சாட்சிகளை வழங்குமாறு மேலும் உத்தரவிடப்பட்டுள்ளது.