யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியார் ஹோட்டல் அறையில் உயிரிழந்த நிலையில் 12 வயது சிறுமியின் சடலம் யாழ்ப்பாணம் பொலிஸாரால் நேற்று (12) கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பொலிசார் ஹோட்டல் அறைக்குச் சென்றபோது, உயிரிழந்த சிறுமியின் பாட்டி என சந்தேகிக்கப்படும் பெண் ஒருவரும் ஹோட்டல் அறையில் கட்டிலில் சுயநினைவின்றி இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் இருவரும் திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் வந்துள்ளதுடன், குறித்த பெண் ஹோட்டல் முகாமையாளரிடம் சிறுமி நோயினால் அவதிப்படுவதாகவும், திருகோணமலையில் தனக்கு தேவையான சிகிச்சைகள் கிடைக்காததால் யாழ்ப்பாணத்தில் உள்ள வைத்தியரை பார்க்க வந்ததாகவும் கூறியுள்ளார்.
இருவரும் அறையை வாடகைக்கு எடுத்த பின்னர் ஒரே ஒரு முறை மட்டுமே அறையை விட்டு வெளியேறியதாக ஹோட்டலின் மேலாளர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
அறையில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதாலும்,சத்தம் வராததால், ஊழியர்கள் அறையின் கதவைத் தட்டியதாகவும், ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, சிறுமி இறந்து கிடந்தது தெரிந்ததாகவும் மேலாளர் தெரிவித்தார்.
பாட்டி என்று கூறப்படும் பெண்ணுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும், பொலிசார் வந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, ’எங்கே அழைத்துச் செல்கிறீர்கள்’ என அலறித் துடித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த அறையில் பாட்டி எழுதியதாக சந்தேகிக்கப்படும் கடிதம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், குறித்த கடிதத்தில் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், குறித்த கடிதம் மிகவும் சந்தேகத்திற்குரியதாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.