ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் எழுத்து மூல அறிக்கையிலுள்ள முடிவுரை மற்றும் பரிந்துரைகளை நிராகரிப்பதாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத் தொடர் நேற்று (12) ஜெனிவாவில் ஆரம்பமானது.
இங்கு இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் என்ற தலைப்பிலான 51.1 தீர்மானத்தின் உள்ளடக்க அமுலாக்கத்தில் அடையாளப்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் நாட்டின் தற்போதைய மனித உரிமைகள் நிலைவரம் என்பன தொடர்பில் ஐ.நா.மனித உரிமைகள் பதில் உயர்ஸ்தானிகர் நாடா அல்நஷீப் உரையாற்றினார்.
இதன்போதே ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்திர வதிவிடப் பிரதிநிதி ஹிமாலி அருணதிலக மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 46.1 மற்றும் 51.1 ஆகிய தீர்மானங்களை இலங்கை நிராகரிக்கிறது.
அதேபோன்று இம்முறை வெளியிடப்பட்ட உயர்ஸ்தானிகரின் அறிக்கையிலுள்ள முடிவுரை மற்றும் பரிந்துரைகளையும் தாம் நிராகரிக்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.