தற்போது பெய்து வரும் கடும் மழையுடன் நாடளாவிய ரீதியில் டெங்கு மீண்டும் தலைதூக்கும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரித்துள்ளது.
இந்த வருடத்தில் மேல் மாகாணத்தில் மாத்திரம் 30,300 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அந்த பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்தார்.
கடும் மழை காரணமாக பாடசாலை மாணவர்கள் மத்தியில் டெங்கு பரவும் அபாயம் காணப்படுவதாகவும், டெங்கு நுளம்பு இல்லாத வலயமாக தமது சுற்றுப்புறங்களை முடிந்தளவு சுத்தம் செய்யுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, ஜனவரி முதல் செப்டெம்பர் வரை நாடளாவிய ரீதியில் 62,254 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், மொத்த நோயாளர்களில் 30,355 பேர் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.