சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான துறைசார் மேற்பார்வைக் குழு, இரத்தினங்கள் மற்றும் அது தொடர்புடைய துறைகளுக்கான தற்போதைய இலாப வரி முறையை இரத்து செய்து, வணிகர்களின் அடிப்படை வருமானத்திற்கு தகுந்த அல்லது 2.5 சதவீத வரியை விதிக்க நாடாளுமன்றத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.
மேலும், இரத்தினக்கற்கள் ஏற்றுமதியாளர்களுக்கு உலகின் போட்டித்தன்மையை எதிர்கொள்ள தேவையான புதிய இயந்திரங்களை வரியில்லா இறக்குமதி மூலம் இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்களை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்யும் போது பின்பற்றப்படும் வரிக் கொள்கை மற்றும் பிற முறைகள் குறித்து இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்பதோடு, தாய்லாந்து, சீனா மற்றும் ஹாங்காங் போன்ற நாடுகளில் பரந்த புரிதல் கொடுக்கப்பட வேண்டும் என்றும் குறித்த குழு பரிந்துரைத்துள்ளது.
இத்துறை தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை இக்குழு ஏற்கனவே நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. கூரியர் முறையின் மூலம் மீள் ஏற்றுமதிக்கான இரத்தினக்கற்களை இறக்குமதி செய்வதற்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரித் தொகையான 2.5% இனை நீக்குவது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக அமுல்படுத்துமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்ட சபை உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தலைமையில் நியமிக்கப்பட்ட குழு, நிதி அமைச்சு, இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை, இலங்கை சுங்கம் உள்ளிட்ட பல நிறுவனங்களுடன் கலந்துரையாடியதன் பின்னர் இந்த பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.