மத்திய கிழக்கிற்கு பணிப்பெண்ணாக சென்று வரலாற்றில் அதிகூடிய இழப்பீட்டுத் தொகையை பெற்றுக்கொண்ட இலங்கை பெண் ஒருவர் குவைத்தில் இருந்து இன்று காலை நாடு திரும்பியுள்ளார்.
மஹியங்கனையைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் ஒருவர், கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி குவைத் நாட்டுக்குச் சென்றிருந்த நிலையில், அங்கு பணிபுரிந்த வீட்டின் உரிமையாளரின் மகனால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானார்.
இதனால் அவர் கருவுற்றதால் கருக்கலைப்பு செய்ய ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அதற்கமைய, கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி அவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், தொழில் வழங்குநரின் தரப்பு அவரை நாட்டுக்கு திருப்பி அனுப்ப முயற்சித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், குவைத் விமான நிலைய அதிகாரிகள் அதற்கு சந்தர்ப்பம் வழங்கியிருக்கவில்லை.
பின்னர் குவைத்தில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் இந்த விடயத்தில் தலையிட்டு யுவதியின் சார்பில் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதன்படி, மத்திய கிழக்கில், இலங்கை வீட்டுப் பணிப்பெண் ஒருவர் பெற்ற அதிகூடிய இழப்பீட்டுத் தொகையான, 68 இலட்சம் ரூபா அவருக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.