கொழும்பு மாவட்டத்திலும் மூளைக்காய்ச்சல் பக்டீரியாவால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பக்டீரியாவால் காலி சிறைச்சாலையில் உள்ள இரு கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட இந்த நோயாளி ஜா-எல பகுதியை சேர்ந்த 49 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இரத்மலானை சுகாதார வைத்தியப் பிரிவில் உள்ள நிறுவனமொன்றில் பணிபுரியும் அவர், காய்ச்சல் காரணமாக ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நோயாளி மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த நபரின் பணியிடத்தை சேர்ந்த சுமார் 30 பேர் பரிசோதிக்கப்பட்டு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் வழங்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.