இந்தாண்டில் இதுவரை மொத்தம் 123 காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை மற்றும் காட்டுத் தீ அதிகரிப்பு தொடர்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோனின் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
இக்கலந்துரையாடலின் போது, இராஜாங்க அமைச்சர், ஆயுதப்படை, பொலிஸ், தீயணைப்பு மற்றும் வனப் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட தரப்பினர் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தியதுடன், சாத்தியமான காட்டுத் தீயை குறைக்க எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.
மேலும், நிலவும் வரட்சியான காலநிலையுடன், வேண்டுமென்றே அல்லது கவனக்குறைவான மனித நடவடிக்கைகளினால் காட்டுத் தீ சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், முகாம் குழுக்கள் காரணமாகவும் இவ்வாறான செயற்பாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
எனவே, காடுகள் இவ்வாறு அழிவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அனைவரும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றார்.