இனங்காணப்படாத நோய் காரணமாக, இரண்டு கைதிகள் உயிரிழந்தமையை அடுத்து, கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்திய குழாம் ஒன்று காலி சிறைச்சாலையில் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளனர்.
நோய் கண்டறியப்படும் வரை குறித்த சிறைச்சாலையில் உள்ள கைதிகள் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இனங்காணப்படாத நோய் காரணமாக காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கைதிகள் நேற்று உயிரிழந்தனர்.
அத்துடன் மேலும் 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களின் உடல்களில் கொப்பளங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் உயிரிழந்தவர்கள் சுவாசக் கோளாறு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்த நிலையில் அவர்களது உடல் உறுப்புகள் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த இரண்டு பேரும் போதைப்பொருள் குற்றச்சாட்டில் காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் என சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.