நாட்டில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட குழு கவனம் செலுத்தியுள்ளது.
அமைச்சர் டிரான் அலஸ் தலைமையில் இந்தக் குழு அண்மையில் கூடியதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்போது, போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் பொலிஸார், தேசிய அபாயகரமான போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சபை மற்றும் தேசிய மது ஒழிப்பு அதிகார சபை மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் முன்வைத்த ஆலோசனைகள் மற்றும் யோசனைகளை கருத்திற் கொண்டு குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக திரான் அலஸ் தெரிவித்துள்ளார்.