மாதம்பே, ரத்மல்கர அரச தோட்டத்தில் தேங்காய் திருட்டில் ஈடுபட்ட இராணுவ சிப்பாய் ஒருவர் தோட்ட காவலர்கள் மற்றும் நிர்வாகியால் பிடிக்கப்பட்டு இன்று (18) காலை மாதம்பே பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
லான்ஸ் கோப்ரல் ஆக கடமையாற்றிய இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இவர் மாதம்பே, பனிரெண்டாவ பிரதேசத்தில் வசிப்பவர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த இராணுவச் சிப்பாய் கடந்த 14ஆம் திகதி விடுமுறையில் வீடு திரும்பியிருந்த நிலையில், ரத்மல்கர அரச தோட்டத்தில் தேங்காய் திருடச் சென்ற போது, தோட்ட அத்தியட்சகர் மற்றும் காவலர்கள் அவரைப் பிடித்துள்ளனர்.
சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போது, அவர் கொண்டு செல்வதற்காக சேகரித்து வைத்திருந்த 182 தேங்காய்களும் மீட்கப்பட்டன.
பின்னர் சந்தேகநபர் மாதம்பே பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், அவரை இன்று (18) சிலாபம் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.