காதலனை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்புவதாகக் கூறி 18 இலட்சம் ரூபாவுக்கு மேல் மோசடி செய்த யுவதியொருவரை கிளிநொச்சி பொலிஸார் நேற்று (14) கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியை சேர்ந்த குறித்த இளைஞன், தனது காதலியைப் பார்ப்பதற்காக அவ்வப்போது கிளிநொச்சிக்கு சென்றுள்ளார். அதன்போது யுவதியின் உறவினர் என கூறிய நபர் ஒருவர் தன்னிடம் தொலைபேசியில் பேசியதாகவும், அவர் அவுஸ்திரேலியாவில் வசிப்பதாக தன்னிடம் தெரிவித்ததாகவும் இளைஞன் கூறியுள்ளார்.
சில நாட்களாக தொலைபேசியில் பேசிய பின்னர், தன்னை அவுஸ்திரேலியா அழைத்து செல்லலாம் என்றும், அதற்கு தேவையான ஏற்பாடுகளுக்கு பணத்தை காதலியிடம் கொடுக்குமாறும் சம்பந்தப்பட்ட நபர் கூறியுள்ளார்.
அதன்படி 18 இலட்சம் ரூபாவை காதலியிடம் கொடுத்த பின்னர் காதலி மாறியுள்ளதுடன், தன்னுடனான உறவையும் துண்டித்துக் கொண்டதாக அவர் தெரிவித்தார்.
அதன்பின்னர் குறித்த இளைஞன் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் காதலியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கிளிநொச்சி பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.