லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சிறுநீரக சத்திரசிகிச்சையின் பின்னர் உயிரிழந்த குழந்தைக்கு சிகிச்சையளித்த மருத்துவ அறிக்கைகளில் சிகிச்சையின் போது இரண்டு சிறுநீரகங்கள் இருப்பதாக தெரிவித்திருந்த நிலையில், பிறக்கும் போது ஒரு சிறுநீரகத்துடன் குழந்தை பிறந்துள்ளதாக நீதிமன்றுக்கு வழங்கிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது முற்றிலும் முரணாக இருப்பதாகவும் இது குறித்து உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய பொரளை பொலிஸாருக்கு நேற்று (02) உத்தரவிட்டுள்ளார்.
குழந்தை பிறந்ததில் இருந்து ஒரே ஒரு சிறுநீரகமே இருந்ததாக சட்ட வைத்திய அதிகாரி ருஹுல் ஹக் வழங்கிய வைத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதை பொரளை பொலிஸார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
குழந்தையின் சிகிச்சையின் போது பெறப்பட்ட மருத்துவ சிகிச்சை அறிக்கைகள் குழந்தைக்கு இரண்டு சிறுநீரகங்கள் இருப்பதாகக் கூறப்பட்டதால், சட்ட வைத்திய அதிகாரியின் கூற்றுப்படி, இது எப்படி நடந்தது என்பதை விசாரிக்குமாறு பாதிக்கப்பட்ட தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கோரினார்.
இந்த சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ பதிவேடுகளில் சிக்கல் உள்ளதால், இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்து சிகிச்சை அளித்த அனைத்து மருத்துவ அறிக்கைகளையும் சமர்ப்பிக்குமாறு கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் உத்தரவிட்டுள்ளதாக நீதவான் மேலும் குறிப்பிட்டார்.
சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை நேற்று (02) நீதிமன்றில் அழைக்கப்பட்ட போதே இந்த உண்மைகள் முன்வைக்கப்பட்டன.
அதன்படி உயிரிழந்த மூன்று வயதுடைய மொஹமட் பஸ்லிம் ஹம்தி பஸ்லிமின் தாய் பாத்திமா ரிஸானா அப்துல் காதர் (வயது 41) மரண விசாரணையின் முதல் சாட்சியாக சாட்சியமளித்தார்.
அங்கு தனது மகனின் இடது சிறுநீரகத்தை அகற்றும் அறுவை சிகிச்சையின் போது வலது சிறுநீரகமும் தவறுதலாக அகற்றப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக அவர் சாட்சியளித்திருந்தார்.
2022 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் திகதி கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் விசேட வைத்தியர் நவீன் விஜேகோனால் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்த வைத்தியசாலையின் வைத்தியர்கள் தனக்கும் தனது கணவருக்கும் தெரிவித்ததாகவும் சாட்சி தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று மாதங்களில் சிறுநீரகம் பொருத்தப்படும் என கூறப்பட்ட போதிலும், கடந்த 27ஆம் திகதி லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எம்.ஐ.சி.யூ பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தனது குழந்தை உயிரிழந்ததாக தெரிவித்த சாட்சி மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“என் மகன் கடந்த ஏப்ரல் 11, 2020 அன்று காசல் மகளிர் வைத்தியசாலையில் பிறந்தான். பிறக்கும்போது ஆரோக்கியமானவர், எடை 3 கிலோ 550 கிராம். அவருக்கு ஆறு மாத குழந்தையாக இருந்தபோது, அவரது வயிற்றில் கட்டி போன்ற ஒன்று காணப்பட்டதால், தனியார் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்தோம்.
பரிசோதனையில், குழந்தைக்கு சிறுநீர் வெளியேறும் கோளாறு இருப்பதாகவும், இடது சிறுநீரகம் வளரவில்லை என்றும் டாக்டர்கள் கண்டறிந்தனர். சிறுநீரக நிபுணர் டாக்டர் ரந்துல ரணவக்கவிடம் குழந்தையை அழைத்துச் சென்றோம்.
அதன் பின்னர், டாக்டர் மலிக் சமரசிங்கவிடம் அழைத்துச் சென்றோம். இருவரும் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தான் மகனுக்கு சிகிச்சை அளித்தனர்.
குழந்தைக்கு சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை தேவையா என்று டாக்டர் மலிக் சமரசிங்கவிடம் கேட்டேன். அப்போது ஒரு சிறுநீரகம் செயலிழந்து உள்ளதாக டாக்டர் கூறினார். மற்றது 91 சதவீதம் செயலில் உள்ளதாக தெரிவித்தார். எனவே, சிறுநீரகத்தை மாற்று சத்திர சிகிச்சை செய்ய வேண்டிய அவசியமில்லை, செயலிழந்த சிறுநீரகத்தை அகற்ற வேண்டும் என்றனர்.
பின்னர் இடது சிறுநீரகத்தை அகற்றுவதற்காக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு குழந்தை கொண்டு செல்லப்பட்டது. சத்திர சிகிச்சை நவம்பர் 2022 இல் திட்டமிடப்பட்டது. அன்றைய தினம் டொக்டர் மலிக் சமரசிங்கவிற்கு இடமில்லை எனக் கூறி வீட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டு டிசம்பர் 22 ஆம் திகதி வழங்கப்பட்டது. பின்னர் 24ம் திகதி சத்திர சிகிச்சை செய்யப்பட்டது.
டாக்டர் நவின் விஜேகோன் குழந்தைக்கு சத்திர சிகிச்சை செய்ததாக பின்னர் தெரிய வந்தது. சத்திர சிகிச்சை செய்யப்பட்டு, குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். காலையில் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்பட்டோம். குழந்தை வீங்கியதை உணர்ந்தேன். அங்கிருந்த மிஸ் ஒருவரிடம் கேட்டபோது, ஆபரேஷன் முடிந்து குழந்தை சிறுநீர் கழிக்கவில்லை என்று கூறினார்.
இதுகுறித்து மருத்துவர்களிடம் கூறினேன். டாக்டர்கள் பதற்ற சூழ்நிலயில் இருப்பதை புரிந்து கொண்டேன். டாக்டர் நவீன் விஜேகோன், டாக்டர் ரந்துல ரணவக்கவை இங்கு அழைத்து வந்து குழந்தையை காண்பித்தார். பின்னர், குழந்தைக்கு பல மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன.
அப்போது அவர் எங்களுடன் பேச வேண்டும் என்றார். வைத்தியர்களை சந்தித்தோம். அப்போது வைத்தியர்கள் “இடது பக்க சிறுநீரகத்தினை அகற்றும் போது வலது பக்கமும் கழன்று விட்டது” என்றார். அப்போது நாங்கள் ‘இரண்டு சிறுநீரகமும் இல்லாமல் குழந்தை எப்படி வாழ முடியும்? உங்கள் வார்த்தையை நம்பித்தானே நாங்கள் இங்கு வந்தோம்? ஏன் இப்படி செய்தீர்கள்..? என்று கேட்டோம்.
அப்போது, தாங்கள் செய்த தவறை ஒப்புக்கொண்டனர். அதற்கு மாற்று வழி இருப்பதாகவும் கூறினார். அவருக்கு சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை செய்ய வேண்டும், அதுவரை டயாலிசிஸ் செய்ய வேண்டும். இன்னும் மூணு மாதத்தில் சிறுநீரக சத்திரசிகிச்சை செய்வோம் என்றனர். சொல்லிவிட்டு ஒரு மாதம் நான்கு நாட்கள் வைத்தியசாலையில் வைத்து வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள்.
மூன்று தடவைகள் குழந்தையின் இரத்தம் ஏற்றுவதற்கு குழாய் பொருத்தச் சென்று குழந்தைக்கு முடியாமல் போனது. இருந்தது. வீட்டில் ஒரு தனி அறையை தயார் செய்து, குழந்தைக்கு இரத்தத்தை டயாலிசிஸ் செய்ய கற்றுக் கொடுத்தார்கள்.
குழந்தையின் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை குறித்து விசாரிக்க வைத்தியசாலைக்கு சென்ற போதும், அவர்களைச் சந்திக்க முடியவில்லை. ஆனால், தனியார் மருத்துவமனைக்குச் சென்றபோது, டாக்டர் மலிக் சமரசிங்க உரிய பதில் அளிக்காமல், ‘உங்களுக்கு நாங்கள் உதவுவோம்’ என்றார். குழந்தைக்கு முடியாமல் போகவும் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம். குழந்தை இறந்தது. இதற்கு காரணம் குழந்தைக்கு இரண்டு சிறுநீரகங்களும் இல்லாததால்தான்.- என்றார்.