இலங்கைக்கு இவ்வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் 763,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் சுமார் 800 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தைப் பெற முடிந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (01) நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் டயனா கமகே இதனை தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் டயனா கமகே,
சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில், இரவு நேர பொருளாதார முறையை (Night Economy ) பின்பற்ற வேண்டும்.
ஒருவரின் வாழ்க்கையை சுதந்திரமாக அனுபவிக்க தேவையான வசதிகளை வழங்கும் இடமே சுற்றுலாத் தலமாகும்.
எனவே இரவு 10 மணிக்கு சுற்றுலா தலத்தை மூடினால் சுற்றுலாப் பயணிகள் வருகை தரமாட்டார்கள். இறந்த நகரங்களுக்கு (Death City) சுற்றுலாப் பயணிகள் வருவதில்லை.
எனவே, நமது கடற்கரைகளை இரசிக்க வேண்டுமெனில் சுற்றுலாப் பயணிகள், இரவு முழுவதும் கடற்கரையில் தங்க வாய்ப்பளிக்க வேண்டும். அதற்கான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்றார்.