2016 ஆம் ஆண்டு ராஜகிரியவில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்ல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க இன்று நீதிமன்றில் ஆஜராகியபோது, இந்த வழக்கின் அடிப்படையான இதேபோன்ற மற்றுமொரு வழக்கு தொடர்பாக தனது கட்சிக்காரர் உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்தார்.
உயர் நீதிமன்ற விசாரணைகளை இடைநிறுத்துவதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளதாக சட்டத்தரணி தெரிவித்தார்.
குறித்த வழக்கு தொடர்பில் பிரதிவாதி மேன்முறையீட்டு நீதிமன்றில் மற்றுமொரு மேன்முறையீட்டையும் தாக்கல் செய்துள்ளதாக சட்டத்தரணி மேலும் தெரிவித்தார்.
உண்மைகளை கருத்திற்கொண்ட கொழும்பு உயர் நீதிமன்றம் வழக்கை 2023 செப்டெம்பர் 23 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.