அங்கொட தேசிய மனநல வைத்தியசாலையில், சிகிச்சைப்பெற்ற நோயாளி ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில், இரண்டு உதவி சுகாதார உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கொட தேசிய மனநல வைத்தியசாலையில், சிகிச்சைப்பெற்ற நோயாளி ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார்.
வட்டரெக பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 47 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
நீண்டகாலமாக மன நோய்க்கு ஆளான குறித்த நோயாளி, தீவிரமடைந்த நோய் நிலைமை காரணமாக கடந்த 20ஆம் திகதி அங்கொட மனநல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், கடந்த 25ஆம் திகதி அதிகாலை வேளையில் குளியலறையில், வழுக்கி விழுந்த சந்தர்ப்பத்தில், தலையில் அடிப்பட்டதால் அவர் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், குறித்த நோயாளியின் சடலம் முத்திரையிடப்பட்ட நிலையில், உறவினர்களிடம் வழங்கப்பட்டதன் காரணமாக உறவினர்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தினால் முல்லேரியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, அந்த வைத்தியசாலையின் விசேட சட்டவைத்திய அதிகாரி சன்ன பெரேராவினால், பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.
ஆயுதங்களினால் தாக்கப்பட்டமையால், ஏற்பட்ட பல உள்காயங்கள் காரணமாக குறித்த நபர் மரணித்துள்ளதாக பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.