சேவையில் இருந்து நிறுத்தப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 175 பேருந்துகள் பழுதுபார்க்கப்பட்டு மீண்டும் பயணிகள் போக்குவரத்து சேவையில் இணைப்பது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நேற்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இது தொடர்பான ஆவணங்களை ஜனாதிபதியிடம் கையளித்தார்.
மூன்று வருடங்களுக்கு மேலாக சேவையில் இருந்து ஒதுக்கப்பட்டிருந்த 852 பேருந்துகளில், 400 பேருந்துகளை பழுதுபார்க்கும் வேலைத்திட்டம் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவின் பணிப்புரைக்கமைய திறைசேரி ஒதுக்கீட்டின் கீழ் டிப்போக்கள் மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
அதன் கீழ் திருத்தப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்ட 175 பேருந்துகள், நேற்று கையளிக்கப்பட்டதுடன், இதற்காக சுமார் 300 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது.
கையளிக்கப்பட்ட 175 பேருந்துகளில் 15 பேரூந்துகள் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்துக்காக “சிசு செரிய” வேலைத்திட்டத்திற்கும், மற்றைய பேருந்துகள் பயணிகள் போக்குவரத்து சேவைகளுக்காக அந்தந்த டிப்போக்களுக்கு ஒப்படைக்கப்படும்.