பேராதனை போதனா வைத்தியசாலையில் மற்றுமொரு சந்தேகத்திற்கிடமான மரணம் பதிவாகியுள்ளது.
21 வயதான சமோதி சங்தீபனி கடந்த திங்கட்கிழமை வயிற்றுப்போக்கு காரணமாக கெட்டபிட்டிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அன்றைய தினம் இரவு அந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற அவர்,நேற்று காலை பேராதனை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு saline ஏற்றப்பட்ட சிறிது நேரத்தின் பின்னர் கை கால்கள் நீல நிறமாக மாறி, கீழே வீழ்ந்ததாக சமோதி சங்தீபனியின் தாயார் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், அவருக்கு ஊசி ஏற்றப்பட்ட பின்னர் எரிவதாகக் கூறியதால், மீண்டும் ஒரு ஊசி ஏற்றப்பட்டதாகவும், கண்கள், வாய் எரிவதாக சமோதி சங்தீபனி தனது தாயிடம் கூறியதாகவும் அவரின் தந்தை தெரிவித்தார்.
ஏற்றப்பட்ட ஊசியில் பிரச்சினை இருப்பதாக சங்தீபனியின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளதாக பேராதனை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அர்ஜூன திலகரத்ன தெரிவித்தார்.
எனினும், சிகிச்சை அளிக்கப்பட்ட போது குறித்த யுவதி உயிரிழந்துள்ளதாகவும் அதற்கான காரணம் இன்னமும் அறியப்படவில்லை எனவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் கூறினார்.
சிக்கல்களுக்கு உள்ளான எந்தவொரு மருந்தும் அவருக்கு வழங்கப்படவில்லை எனவும் அவருக்கு வழங்கப்பட்ட மருந்து வைத்தியசாலையில் ஏனைய நோயாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, பேராதனை போதனா வைத்தியசாலையில் Bupivacaine என்ற மயக்க மருந்து வழங்கப்பட்ட நிலையில், இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். அந்த மருந்தின் ஒரு தொகுதியில் ஒரு பதார்த்தம் குறைவாக இருந்தமையே உயிரிழப்பிற்குக் காரணம் என்பது பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் உறுதியானது. தற்போது அந்த மருந்தின் பயன்பாடு நிறுத்தப்பட்டுள்ளது.