மூலப்பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இடைநடுவே நிறுத்தப்பட்ட கொழும்பு மாநகரின் 10 நடுத்தரவர்க்க வீட்டுத் திட்டங்களின் நிர்மாணப்பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனுடன் தொடர்புடைய முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அமைச்சின் செயலாளர் சத்தியானந்தன் தெரிவித்துள்ளார்.
2000 இற்கும் மேற்பட்ட வீடுகளைக் கொண்ட குறித்த வீடமைப்புத் திட்டத்தை நிர்மாணிப்பதற்கான முதலீட்டின் பெறுமதி 30 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும். பொருளாதார நெருக்கடியுடன் மூலப்பொருட்களின் விலை உயர்வு, மூலப்பொருட்களுக்கான தட்டுப்பாடு, எரிபொருள் விலை அதிகரிப்பு போன்ற பல காரணங்களால் அந்த திட்டங்களின் நிர்மாணப் பணிகள் ஒரு வருட காலமாக முடங்கியிருந்ததாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கிணங்க, வீட்டு அலகுகளின் பெறுமதியை அதிகரித்து குறித்த வீட்டுத்திட்டங்களை நிர்மாணிக்க ஒப்பந்த நிறுவனங்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த வருட இறுதிக்குள் திட்டங்களின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.