ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய் ஒருவர் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுக்கத் தயாராக இருந்த நிலையில் உயிரிழந்துள்ள சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான லவந்தி சதுரி ஜயசூரிய என்ற 36 வயதுடைய குறித்த பெண் திருமணமாகி எட்டு வருடங்கள் கழித்து குழந்தை இல்லாததால், குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆசையில் இருந்ததாக அவரது கணவர் அமில சமரவீர கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவது,
குறித்த பெண் கடந்த 28 ஆம் திகதி நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றின் விசேட வைத்தியரின் ஆலோசனைக்கு அமைய ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் 23 வாரங்கள் கருவுற்றிருந்தாகவும் கடந்த 29 ஆம் திகதி இரவு அவர் சிரமப்பட்டாதாவும் 30 ஆம் திகதி காலை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து இரண்டாவது நாள் பகல், மனைவி மற்றும் மூன்று குழந்தைகளும் இறந்துவிட்டதாக ராகம வைத்தியசாலையால் தெரிவிக்கப்பட்டதாக அந்த பெண்ணின் கணவர் தெரிவித்தார்.
உயிரிழந்த பெண்ணின் கணவரான அமில சமரவீர, இந்த துயர சம்பவம் வைத்தியசாலையின் அலட்சியத்தால் நடந்துள்ளது. இது தொடர்பில் முறைப்பாடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தாய் மற்றும் மூன்று பிள்ளைகளின் இறுதிச் சடங்குகள் நேற்று மாலை இடம்பெற்றன.
இந்த சம்பவம் தொடர்பில் ராகம போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரணவீர கருத்து தெரிவிக்கையில்,
உயிரிழந்த பெண்ணுக்கு பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த நிலையில், குழாய் மூலம் பிரசவத்திற்காக கருப்பையில் கருமுட்டை பொருத்தி தனியார் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சிகிச்சைகள் அரச வைத்தியசாலைகளில் செய்யப்படுவதில்லை. இவற்றை தனியார் வைத்தியசாலைகள் பல இலட்சம் ரூபா செலவழித்து செய்கின்றன.
இதன்போது பல கருமுட்டைகளை பொருத்துகிறார்கள். குறைந்தபட்சம் ஒரு முட்டையாவது நன்றாகப் போகும் என்ற நம்பிக்கையில் இவ்வாறு செய்யப்படுகிறது.
எனினும், இந்த தாய்க்கு மூன்று முட்டைகளும் கருவுற்றிருந்தது. எவ்வாறாயினும், சுமார் இருபது வாரங்களில், அவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டு ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த தாயையும் அவரது மூன்று குழந்தைகளையும் காப்பாற்ற வைத்தியசாலையின் ஊழியர்கள் கடுமையாக உழைத்தனர்.
கருவில் இருந்த குழந்தைகளும் தாயும் உயிரிழந்தமைக்கு வைத்தியசாலை பொறுப்பல்ல என அவர் தெரிவித்தார்.